உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கறைக்க உதவும் பச்சை ஆப்பிள்
Addon on 18-01-2017

‘தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரைப் பார்க்க வேண்டி இருக்காது’ என்பார்கள். ஆம், அதில் உள்ள வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடியவை. ஆப்பிளிலும், ‘கிரீன்’ ஆப்பிள் எனப்படும் பச்சை நிற ஆப்பிளில் பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருக்கின்றன. அவை பற்றி இங்கு பார்ப்போம்...
 
 
* கிரீன் ஆப்பிளின் தோல் மற்றும் சதைப்பகுதிகளில் அதிக அளவு நார்ச்சத்துகள் உள்ளன. இவை குடலின் இயக்கத்தை நெகிழ்வுபடுத்துகின்றன. தினமும் கிரீன் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.
 
* கிரீன் ஆப்பிளில் அனைத்து முக்கியமான தாதுப்பொருட்களும் அடங்கியிருக்கின்றன. கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், மெக்னீசியம் போன்ற சத்துகள் எலும்பு வளர்ச்சிக்கு மிக முக்கியத் தேவைகளாகும். இது தைராய்டு ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
 
* கிரீன் ஆப்பிள், குடலில் உள்ள பாதிப்புகளைச் சரிசெய்கிறது. அதில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், குடலில் தங்கும் கிருமிகள், நச்சுகளை அகற்றி குடல் இயக்கத்தைப் பலப்படுத்துகிறது. முக்கியமாக குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
 
* உடலின் மிக முக்கியச் செயல்பாடான வளர்சிதை மாற்றத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. செரிமான சக்தியை அதிகப்படுத்துகிறது.
 
* இதயத் தமனிகளில் அடைக்கும் கொழுப்புகளான எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பை குறைக்கச் செய்கிறது. நல்ல கொழுப்பான எச்.டி.எல்.லை அதிகப்படுத்தி, இதயத்தை பலப்படுத்துகிறது.
 
* வயதான காலத்தில் ஞாபக சக்தியை முழுக்க மழுங்கடிக்கும் அல்சைமர் நோயை வர விடாமல் தடுக்கும் பண்புகளை கிரீன் ஆப்பிள் கொண்டிருக்கிறது.
 
* நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை கிரீன் ஆப்பிள் தூண்டுகிறது. அதனை முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. இதனால் கிருமிகள் தாக்குவது குறையும், ஆரோக்கியம் காக்கப்படும். அத்துடன், கல்லீரலை பலப்படுத்துகிறது, அன்றாடம் தங்கும் நச்சுகளை வெளியேற்றுகிறது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் நொதிகளுக்குத் தூண்டுகோல் ஆகிறது.


Tags: green apple, fats, health tips


FOLLOW US ON
    

 
contador usuarios online